கழுத்து வெட்டியும் படுகொலை?
செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக புதைக்கப்பட்டமை இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது மண்டையோடுகள் அற்ற என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சில மண்டையோடுகள் என்புக்குவியல்களுடன் தனித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மண்டையோடுகள் அற்ற நிலையில் சில என்பு கூடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சில மண்டையோடுகள் குவியலாக காணப்படுகிறது. மனித என்புக்கூடுகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலாக காணப்படும் மண்டையோட்டு தொகுதிகள் , மண்டையோடு அற்ற என்புக்கூடுகளுக்கு உரியனவா என்பதனை தீர்மானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மற்றும் தூதுவர் எட்டுப் பேர் அடங்கிய உயர்மட்ட குழு நாளை காலை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment