யாழில் நீதி கோரி சர்வதேச மாநாடு!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னரும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரம் தோய்ந்த வரலாறு 1948ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. கணக்கற்ற தமிழ் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதையோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது. விசாரணை என்கிற பெயரில், ‘திருடனே குற்றவாளியைத் தேடும் படலத்தை’ அரசு அரங்கேற்றி வருகின்றது. நீதி கோரும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய வேலைத்திட்டங்கள் குறித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் பலத்த எதிர்ப்பையும் அதிருப்தியையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றோம்.
தற்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏனைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக எமது விடயத்தைக் கையாள்வதை அவதானிக்கிறோம். ‘தெற்கில் சிங்கள இளைஞர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; எனவே தெற்கோடு கைகோர்த்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். அடிப்படையில் அறமற்ற இந்த வாதம், எமது கண்ணீரை விலை பேசுகிறது. எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, நாம் நட்டஈட்டையோ அல்லது அரச வேலைவாய்ப்புகளையோ பெற்றுக்கொண்டு, மரணச் சான்றிதழில் கையெழுத்திடத் தயாரில்லை. ஆனால் தெற்கு அதனை எப்போதோ செய்துவிட்டது. நாம் எமது பிள்ளைகள் எங்கே என்றுதான் கேட்கிறோம்; அதற்கான நீதியைத்தான் கோருகின்றோம்.
நீதி கோரி நீண்ட காலமாக நாம் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துவிட்டனர். அவர்களின் இறப்பின் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டவரைத் தேடும் வீச்சும் அருகி வருகிறது. இவ்வாறானதொரு நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் பொறிமுறைகளை நிராகரித்து, சர்வதேச நீதியைக் கோரும் நிகழ்வாக இவ்வருட சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

Post a Comment