திருவள்ளுவரிற்கு இனி பிரச்சினையில்லை!
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர். யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி உள்ளிட்டவர்கள் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
முன்னர் 7 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த இச்சபை, தற்போது 9 உறுப்பினர்களைக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது:
பதவி வழி உறுப்பினர்கள் (4 பேர்): மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் ஆளுநர்), புத்தசாசன அமைச்சுச் செயலாளர், யாழ். மாநகர சபை முதல்வர், மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர். துறைசார் உறுப்பினர்கள் (5 பேர்): துறைரீதியாக 5 நிபுணர்களை பெயர் குறித்து நியமிக்கவும் யாழ். மாநகர சபை உட்பட அனைத்துத் தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
மேலும், ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த உடன்படிக்கையில் யாழ். மாநகர சபையினால் சுட்டிக்காட்டப்பட்ட 12ஆவது சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புகளும் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளன. சுமூகமான முடிவுகளை அடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment