கத்தி கீழே தலை!



வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.

ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார்.

அதற்கு எதிராக எழுத்தாணை மனு ஒன்று வவுனியா மேல்நீதிமன்றில் நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டு, இன்று அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கான அறிவித்தல் பிரதிவாதிகளுக்கும் அனுப்பபட்டிருந்த நிலையில் எவரும்  சமூகமளித்திருக்கவில்லை.

காண்டீபனை முதல்வர் பதவியிலும் அல்லது உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குகின்ற குறித்த வர்த்தமானி பிரசுரத்தை இடைநிறுத்தவும் வர்த்தமானியின் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்க கூடாது என்ற தடை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே காணாமல் போயிருந்த மாநகரசபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments