கன்னியாவில் ஏதும் செய்யவில்லையாம்?



திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று செய்தது புதிய கட்டுமானம் அல்ல ஏற்கனவே உள்ளதை நாங்கள் பாதுகாத்து வருகிறோமென யாழில் வைத்து புதிய விளக்கமளித்துள்ளார் இலங்கையின் பௌத்தசாசன அமைச்சர பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி.

இதனிடையே கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்  தெரிவித்துள்ளார்.

புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவ தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.

கன்னியா வெந்நீரூற்றை பொறுத்த வரை சைவத்தழிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னமெனலாம். அத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.

சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச் சூழலைப் பயன்படுத்தி பௌத்த மயமாக்க முனைவதும் வேதனைதரும் செய்தியாகும்.

தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலை நிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம்.

இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் வேண்டுகின்றோமெனவும் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார். 


No comments