மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லையாம்
மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறவில்லை. அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்தி கூறுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பால நிர்மாணிப்புக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்,
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லை. இராணுவத் தேவைகளுக்கான காணிகள் தவிர, மக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்போம்.
கடந்த 40 வருடங்களாகப் பூட்டப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, வட மாகாணத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடிகள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. 37 வருடங்களுக்குப் பிறகு பலாலி வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அதேவேளை , பலாலி இராணுவ வைத்தியசாலை தனியார் காணியில் அமைந்துள்ளது. அந்த காணிக்கு நஷ்ட ஈடு வழங்குவதா ? அல்லது அவருக்கு மாற்று காணி வழங்குவதா ? அல்லது வைத்தியசாலை அங்கிருந்து அகற்றுவதா என்பது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் , காணி உரிமையாளர்களை அழைத்து பேசி முடிவுகள் எடுக்கப்படும்
அதேபோன்று , வடக்கில் இரன்டுவத்தினர் தமது சுய தேவைக்கு விவசாயம் செய்வதாக கூறினாலும் , அவர்கள் வெளியில் மரக்கறிகளை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Post a Comment