நோர்வேயின் இளவரசி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்!!


உயிருக்கு ஆபத்தான நாள்பட்ட நுரையீரல் நோய் காரணமாக, நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட் மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச குடும்பம் அறிவித்துள்ளது.

52 வயதான அந்த இளவரசியால், அரச குடும்பத்தின் ஒரு பணி உறுப்பினராகத் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று வெள்ளிக்கிழமை அரண்மனை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோர்வே அரியணைக்கு வாரிசான ஹாக்கனின் மனைவியான அந்த இளவரசிக்கு, 2018-ஆம் ஆண்டில், குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவான, நாள்பட்ட மற்றும் படிப்படியாக மோசமடையும் நுரையீரல் நோயான நுரையீரல் நார்ப்பெருக்கம் (pulmonary fibrosis) இருப்பது கண்டறியப்பட்டது.

பட்டத்து இளவரசியின் நுரையீரல் நோயின் முன்னேற்றம் தீவிரமாக உள்ளது என்று ஓஸ்லோவின் ரிக்ஸ்ஹாஸ்பிடலெட் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் ஆரே ஹோம் அந்த அறிக்கையில் கூறினார். ஒரு விரிவான மருத்துவ மதிப்பீட்டிற்குப் பின்னர்  பொருத்தமான கொடையாளர் கிடைத்தவுடன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கான காத்திருப்புப் பட்டியலில் அவர் இப்போது வைக்கப்பட்டுள்ளார்.

கொடையாளருக்காக மெட்டே-மாரிட் காத்திருக்கும் வேளையில், அவரால் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது என்று அரண்மனை கூறியுள்ளது.

அவரது உடல்நிலை, இந்த வாரம் ஜப்பானுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்துக்கொண்டு முன்கூட்டியே திரும்பிய அவரது கணவரான பட்டத்து இளவரசருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தம்பதியினர், ஆகஸ்ட் மாதம் வரவிருந்த தங்களது வெள்ளி விழா திருமண நாள் கொண்டாட்டங்களை ஒத்திவைக்கின்றனர். அதே சமயம், செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த நார்வே சுற்றுப்பயணத்தில் மெட்டே-மாரிட் இனி பங்கேற்க மாட்டார்.

பட்டத்து இளவரசியுடன் அதிக நேரம் செலவிடுவதற்காக, பட்டத்து இளவரசர் வரும் காலத்தில் தனது பயணத் திட்டத்தை மாற்றியமைப்பார் என்று அரண்மனை கூறியது. அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும், அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளும் பயணங்களில் செலவிடும் நேரத்தையும் குறைத்துக் கொள்வார்.

இந்தத் தம்பதியரின் மகளான இளவரசி இங்க்ரிட் அலெக்ஸாண்ட்ரா, ஆஸ்திரேலியாவில் படித்துவருவதிலிருந்து நார்வே திரும்பியுள்ளார். அரண்மனையின்படி, அவர் இலையுதிர் காலப் பருவத்தை ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் கழிப்பார். அவரது சகோதரர் இளவரசர் ஸ்வெர்ரே மேக்னஸ் இந்த இலையுதிர் காலத்தில் ஐரோப்பாவில் தனது படிப்பைத் தொடங்கவிருக்கிறார் என்றும், சூழ்நிலை தேவைப்படும்போது அவர் நார்வே திரும்புவார்" என்றும் அரண்மனை கூறியது.

1999-ல் ஒரு இசை விழாவில் ஹாக்கனைச் சந்தித்தபோது மெட்டே-மாரிட் ஒரு தனித்தாய். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 800 விருந்தினர்கள் மற்றும் மில்லியன் கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன்னிலையில் ஓஸ்லோ பேராலயத்தில் இந்தத் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டபோது, ​​அவர் பட்டத்து இளவரசியானார்.

சமீப மாதங்களில் அரச குடும்பம் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. பட்டத்து இளவரசியின் முந்தைய உறவின் மூலம் பிறந்த மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி, கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கிடையில், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசிக்கு முன்பு நெருங்கிய உறவு இருந்தது எப்ஸ்டீன் கோப்புகளின் வெளியீட்டில் தெரியவந்ததால், அவரே ஒரு தனி சர்ச்சையின் மையமாகியுள்ளார்.

No comments