வாட்ஸ் அப்பிலும் இன்காக்னிட்டோ சாட்: மெட்டா எடுத்த புதிய முடிவு!
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் குரல்/வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக இந்த தளம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை, தனிப்பட்ட மற்றும் குழு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாகவும் இது மாறியுள்ளது. வாட்ஸ் அப்பில் பயனர்க்ளை கவர அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வெளியிடப்படுவது வழக்கம் அந்த வகையில், புதிய அப்டேட் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.
வாட்ஸ்அப்பில் மெட்டா ஏ.ஐ பயன்படுத்தும் பயனர்களுக்காக, இன்காக்னிட்டோ சாட் (Incognito Chat) என்ற புதிய தனியுரிமை அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், உடல் நலம், பண விவரங்கள், தனிப் பட்ட பிரச்சினைகள் அல்லது அலுவலக ரகசியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை, மற்றவர்கள் பார்க்க முடியாத பாதுகாப்பான சூழலில் ஏ.ஐ.யுடன் பகிர்ந்து பேச முடியும்.
இந்த அம்சம், மெட்டாவின் பிரைவேட் பிராசசிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதனால், பயனரின் உரையாடல்களை மெட்டா நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது. இதனுடன் சைட் சாட் என்ற புதிய வசதியையும் மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்அப் உரையாடலின் நடுவிலேயே, மற்றவர்களுக்கு தெரியாமல் தனிப்பட்ட முறையில் மெட்டா ஏ.ஐ. உதவியை பெற முடியும். இந்த புதிய தனியுரிமை அம்சம், வரும் மாதங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா ஏ.ஐ. செயலிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Post a Comment