நேட்டோ உச்சிமாநாடு: துருக்கியில் நூற்றுக்கணக்காணோர் கைது!
இஸ்லாமிய அரசு மற்றும் அங்காரா பயங்கரவாத அமைப்புகளாகக் கருதும் பிற குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்டோரை துருக்கிய பாதுகாப்புப் படைகள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நேட்டோ தலைவர்கள் அடுத்த மாதம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் கூட்டணியின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக கூடவுள்ளனர். இதனை முன்னிட்டு, அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், காவல் பணிகளை தீவிரப்படுத்தவும் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மற்ற 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஜூலை 7-8 திகதிகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கி நீண்ட காலமாக பல்வேறு உள்நாட்டு அதிருப்திக் குழுக்களிடமிருந்து வன்முறை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது, மேலும் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் அடிக்கடி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்கிறது.
கடந்த மாதம், புலனாய்வாளர்கள் இஸ்லாமிய அரசு சந்தேக நபர்களைக் குறிவைத்து நாடு தழுவிய தேடுதல் வேட்டையை நடத்தி, 324 பேரைக் கைது செய்தனர்.
ஜூன் 28 முதல் நிகழ்ச்சி முடியும் வரை பொது ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
விமான நிலையங்களுக்குச் செல்லும் சாலைகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும், மேலும் உச்சிமாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும், தூதுக்குழுக்கள் தங்கும் ஹோட்டல்களும் சீல் வைக்கப்பட உள்ளன.

Post a Comment