பிள்ளையானிற்கு வாயில் பிழை??
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2008ஆம் ஆண்டில் அரங்கேறிய படுகொலைகள் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று 30ம் திகதி செவ்வாய்கிழமை அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐந்து மனிதக்கொலைகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடத்திய நீண்ட விசாரணைகளின் பின்னர், கடந்த ஜூன் 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அனைத்து கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை, இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். அதன்படியே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைச்சாலை வாகனத்தில் இருந்தவாறு ஊடகவியலாளர்களைப் பார்த்து சத்தமிட்ட பிள்ளையான், "இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வாயைப் போல முற்றிலும் பொய்யானவை; இவை திட்டமிட்ட பொய்க் குற்றச்சாட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment