மூன்று வருடங்களுள் நகை மீளளிப்பாம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்களை விரைவில் உரியவர்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேக்கர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சி.சிறீதரனால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு இன்று பதில் வழங்கிய அவர்,
“வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எவ்வித ஆபரணங்களும் தமிழ் மக்களிடம் இருந்து இராணுவத்தால் பெறப்படவில்லை. எனினும் முகாம்களில் இருந்து பெறப்பட்ட ஆபரணங்களின் அளவு 150கிலோகிராம் ஆகும்.
அந்த ஆபரணங்கள் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்து நீதிமன்ற தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களம், மத்திய வங்கி மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஆகியவை இணைந்து நடவடிக்கையை முன்னெடுக்கின்றன.
எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் நகைகள் ஒப்படைப்பு நிறைவு செய்யப்பமென எதிர்பார்க்கின்றோம். 2014 ஆம் ஆண்டில் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட 2015 பேருக்கு அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மீண்டும் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எஞ்சிய ஆபரணங்கள் சட்ட ரீதியாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. ஆபரணங்களின் உரிமையாளர்களின் விபரம் முழுமையாக இல்லாததால் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் இதனை வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படும்” என இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment