45வது நினைவேந்தல் : பொதுசன நூலகத்தில்!
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் பொதுசன நூலக பிரதம நூலகர், நூலக ஊழியர்கள், வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.
நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன்,தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.
தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (01ஃ06) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.

Post a Comment