தப்பில்லை என்கிறார் சுமா!



 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 31 ஆம் திகதி மேற்சொன்ன கூட்டத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் தெரிவு சம்பந்தமாக இக் கிளையின் செயலாளராக இருந்த  சேவியர் குலநாயகம் அனுப்பியதாக கூறப்ப்படும் கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன். அவரைத் தொடர்பு கொள்ளச் செய்த முயற்சி பலனளிக்காத காரணத்தினால் இத் தெளிவுபடுத்தலை எழுதுகிறேன். 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தெரிவுகள் இடம்பெறாமல் இருந்துள்ளது. இக் கிளைக் கூட்டத்தைக் கூட்டுமாறு நானும் எழுத்து மூலம் கோரியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சேவியர் குலநாயகம், கிளைத் தலைவர்  கனகசபாபதியின் இணக்கப்பாட்டுடன் கூட்டியிருந்தார். கூட்டத்தின் ஆரம்பத்தில் இது சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து கூட்டம் முறையே கூட்டப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன் கனகசபாபதி கூட்டத்திற்கு சமூகமளிக்க மாட்டார் என்று அறிவித்திருந்ததையும் வெளிப்படுத்தினார். 

கிளைத் தலைவர் இல்லாத நிலையில் தெரிவுகளை நடத்துவதற்கு தற்காலிகமாகத் தலைவராக எனது பெயர் பிரேரிக்கப்பட்டது. வேறு பெயர்கள் பிரேரிக்கப்படவில்லை. தற்காலிகத் தலைமை (pro tem chair) அந்தக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்பட முடியும். கிளைச் செயலாளரை தலைமை தாங்குமாறு முன்னரே எவரும் அறிவுறத்த முடியாது. அப்படி அறிவுறுத்தியதாக எவரும் கூறவும் இல்லை. 

தெரிவுகள் நடைபெற்ற போது முதலில் செயலாளராக  கேசவன் சயந்தனின் பெயர் முன் மொழியப்பட்டு வழிமொழியப் பட்டது. இன்னொரு பெயரும் முன் மொழியப்பட்டாலும் அதனை எவரும் வழிமொழியவில்லை. அதனால்  சயந்தன் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 

தலைவர் பதவிக்கு சி. வி. கே. சிவஞானத்தின் பெயரை நான் முன்மொழிந்த போது மூவர் அதை ஒரே நேரத்தில் வழிமொழிந்தனர். ஆனால் தலைமை தாங்குபவரின் முன்மொழிவு வழிமொழியத் தேவையில்லை என்று மட்டும் தான் நான் கூறினேன். அது தான் கூட்டங்களுக்கான சட்டமும் கூட. வேறு பெயர்கள் எதுவும் முன்மொழியப்படாத நிலையில் அவர் கிளைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அது போலவே சகல பதவிகளுக்கும் ஒவ்வொருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேறு பெயர்கள் முன்மொழியப்படாத நிலையில் சகல நியமனங்களும் ஏகமனதாகவே இடம் பெற்றன. இந்த செயற்பாடுகள் அனைத்தையும்  குலநாயகமே பதிவு செய்தார்.

அனைத்துத் தெரிவுகளும் முடிந்த பின், உடுப்பிட்டிக் கிளைத் தலைவர் எழுந்து, குலநாயகம் ஒரு பதவிக்கும் தெரிவாகவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது, உடுப்பிட்டித் தொகுதியில் இருந்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் தான் இராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால் குலநாயகம் அதை நிராகரித்து விட்டார். இதுவே கூட்டத்தில் நடந்தது. இந்த விடயங்களை குலநாயகம் அவர்களே பதிவும் செய்தார். கூட்ட நடவடிக்கையில் எவ்விதமான முறைகேடான விடயமும் நடைபெறவில்ல. குலநாயகமோ வேறு எவருமோ இறுதியில் எந்த ஆட்சேபனையையும் எழுப்பவில்லை. புதிய செயலாளர் சயந்தனின் நன்றி உரையோடு கூட்டம் நிறைவு பெற்றது. 

குலநாயத்தின் பெயர் எந்தப் பதவிக்கும் முன்மொழியப்படாதது துரதிர்ஷ்டவசமானதே. ஆனால் அதற்காக கூட்டம் முறையாக நடக்கவில்லை என்று கூற முடியாது. இது குறித்து தலைவரோடு நான் பேசியுள்ளேன். கிளைத் தலைவர் தெரிவை மீளவும் செய்ய நாம் தயார். முறையாக அதற்கான கோரிக்கை வைக்கப்படுமாக இருந்தால் மீளவும் கூட்டத்தைக் கூட்டி அத்தெரிவை நாம் நடத்தலாம்என தெரிவித்துள்ளார் ம. ஆ. சுமந்திரன்.


No comments