கோத்தாவிற்கு சூம்?
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமலாக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்குத் தொடர்பிலேயே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு 10வருட இழுபறிகளின் பின்னராக காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, தன்னால் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என கோட்டாபய ராஜபக்சவினால் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், தற்போது விசேட அனுமதியை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜேவிபி கட்சிசார்பில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மர்மமான முறையில் ஆவரங்கால் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு குடும்பத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்ததால், இந்த வழக்குத் தொடர்பாக அவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment