செம்மணி அருகில் மேலும் புதைகுழிகள்!



செம்மணி புதைகுழிக்கருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச அப்படுகொலையுடன் தொடர்புடைய ஏனைய படை அதிகாரிகள் பற்றி வெளிப்படுத்த தயாராகியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது மனைவியான சம்பா விஜேவிக்கிரம ஊடாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்களை சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.


No comments