வட்டுவாகல் விகாரை மர்மம் என்ன?



இறுதி யுத்தத்தின் பின்னர் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு - வட்டுவாகல் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.  

தெற்கில் ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக் குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். அதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை.

தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, 'ஸ்கேன்' செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து அறிய முடியும்.

இதேபோல், கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் இருக்கின்ற பல இடங்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் இன்றும் பலத்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான இடங்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கூட்டங்கூட்டமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சந்தேகத்துக்குரிய அந்த மனிதப் புதைகுழிகள் அனைத்தும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments