அடுத்து பஸில்: முன்னதாக சசி வீரவன்ச!





இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச விசாரணை நேற்று (10) நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் பிடியாணை தொடர்பிலான அறிவித்தலை விடுத்துள்ளார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியை தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்டுகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கில், சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பளித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக 2022-ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் சசி வீரவன்ச குற்றவாளியாகக் காணப்பட்டார். வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 

நேற்றைய தினம் கோத்தபாயவை காப்பாற்ற விமல் வீரவன்ச முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரது மனைவிக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.


No comments