வடக்கில் புகையிரத திணைக்களத்தின் பயன்பாடற்ற காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை ?
வடக்கில் புகையிரத பாதைகள் தொடர்பான 'மாஸ்டர் பிளான்' அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் பயன்பாடற்று காணப்படும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்குக்கான புகையிரத சேவைகளை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில், இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், வடக்கில் புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத அக்காணிகளைத் துப்புரவு செய்து, மக்களுக்கே வழங்கும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் நகரிலுள்ள அன்னசத்திர வீதியை ரயில்வே திணைக்களம் மூடியுள்ளமைக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை ஆளுநரும், கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரும் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த புகையிரத திணைக்கள அதிகாரிகள், புகையிரத பாதைகள் தொடர்பான 'மாஸ்டர் பிளான்' அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் வடக்கு மாகாண புகையிரத பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை எனவும் தெரிவித்தனர்.
அதன் போது மூடப்பட்ட புகையிரத கடவைகளால் மக்கள் பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்துக் கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும் புகையிரத திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்: பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

Post a Comment