வல்வெட்டித்துறையில் புலிகளின் தலைவருக்கு சிலை வைப்போம் என்ற பாடல் - தேசிய மக்கள் சக்தியின் பாடல் இல்லையாம்


உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக் கட்சியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ,  கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினை ஆதரித்து சமூக ஊடகங்களில் வெளியான பாடல்களில் புலிகள் தொடர்பில் ,  புலிகளின் தலைவர் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , புலிகளின் தலைவருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவோம் எனவும் பாடலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

தற்போது குறித்த பாடலை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் எனில் , கிளிநொச்சி இளைஞனின் பாடலுக்காக ஏன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் கேட்ட போது, அப்பாடலுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments