காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை! விஜய் ஊடாக தமிழரசு உணரவேண்டியது!! பனங்காட்டான்
தமிழகத்தில் எழுபத்தாறு ஆண்டுகால திராவிட மாயையை ஒதுக்குவதற்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே ''நான் வருவேன்" என்று கூறிய 51 வயதான ஒரு சினிமாக்காரன் தமது கனவை நனவாக்கி மக்கள் பீடத்தில் ஏறியுள்ளான். விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவியை வழங்கியதன் ஊடாக 76 ஆண்டுகால அரசியல் தோல்வியை மூடி மறைத்துக் கொண்டு, எவ்வளவு காலந்தான் தமிழ்த் தேசியத்துக்கு தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்க முடியும்?
'காலம் என்னைக் கொண்டு சென்று ஓரிடத்தில் அமர வைக்கும். அதற்கான நேரம், சூழல், இடம் அனைத்தும் அமைந்து வரவேண்டும். அது வரும்போது நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் வருவேன்".
இது, இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கும் ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நடிகர் விஜய் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. 2011ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியதை அப்போது எவரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அதுவே இப்போது நிதர்சனமாகியுள்ளது.
தனது பட்டாபிசேகத்துக்காக பதினான்கு ஆண்டுகள் தமது மனைவி சீதையுடன் காடேகிய இராமரை தெய்வமாகக் கொண்டாடும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரியும் இந்தியாவில், தமிழர்கள் திரட்சியாக வாழும் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிக்கு ஓய்வு கொடுத்து தமிழர் ஒருவரின் தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது.
'காலம் வரும்போது நான் வருவேன்" என்று முற்கூட்டியே முன்மொழிந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கி மூன்று ஆண்டுகள்கூட ஆகவில்லை. மக்களின் நம்பிக்கை நாயகனாக தேர்தல் மூலம் 108 ஆசனங்களை முதல் தேர்தலிலேயே பெற முடிந்தது என்பது ஒரு தனி வரலாறாக சரித்திரம் எழுத ஆரம்பித்துள்ளது.
அடிப்படையில் இவரும் ஓர் சினிமா நடிகர்தான். இதுவே அவரது தொழிலாகவும், வருமானமாகவும் இருந்தது. அரசியல் வாரிசாக இவர் அறிமுகமாகவில்லை. ஆனால், எடுத்த எடுப்பிலேயே அறுபது ஆண்டுகளை அண்மித்த திராவிட ஆட்சிகளுக்கு மக்க;டாகத் தீர்ப்பளித்த ஒரு விடிவெள்ளியாக மலர்ந்திருக்கிறார்.
தனித்து ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் 118 பிரதிநிதிகள் வேண்டும். 108 மட்டுமே இவருக்குக் கிடைத்தது. இதனைக் குறியாக வைத்து இவரை ஆட்சிக் கதிரையில் ஏறாமால் தடுக்க பல வழிகளாலும் பல கட்சிகளும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். மோடியின் பாரதிய ஜனதா கட்சி; ஏஜன்டாக இருக்கும் தமிழக ஆளுனர் அர்லேகர் ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்தார். விஜய்யின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகள்கூட ஆளுனரின் முடிவை வன்மையாகக் கண்டித்தன.
திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணியில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற இந்திய காங்கிரஸ் விஜய் அணிக்கு வழங்கிய ஆதரவை ஜீரணிக்க முடியாத மோடியின் பாரதிய ஜனதா கட்சி இயலுமானவரை விஜய் முதலமைச்சராவதை தடுக்கவே முனைந்தது. எனினும், நான்காம் திகதிக்கும் எட்டாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளால் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யுனிஸ்ட், மார்க்சிய கம்யுனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவு கிடைத்ததால் விஜய்யின் ஆதரவு 118ஐ தாண்டியது.
ஜனநாயக மரபுப்படி கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமது தொகுதியில் தோல்வி கண்டவருமான ஸ்ராலின் கூறினாராயினும், தங்கள் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பாய்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு வழங்கியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் இன்னமும் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று ஸ்ராலின் கூறிய கருத்து அவரது ஆற்றாமையின் வெளிப்பாடாக அமைந்தது எனலாம்.
இன்னொரு கருத்துக் கூறலையும் இங்கு கவனிக்க வேண்டும். புதிய ஆட்சியின் முதல் ஆறு மாதங்களை மிக உன்னிப்பாக நாங்கள் கவனிப்போம். அதன் பின்னரே எந்த முடிவையும் தாங்கள் எடுக்க நேரிடலாம் என்றும் ஸ்ராலின் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்ஸிச கம்யுனிஸ்ட் கட்சியின் சண்முகம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்தும் சூட்சுமமான ஒரு விடயத்தை சுட்டுவதுபோலவே தெரிகிறது. எந்த நிபந்தனையும் இன்றி, எந்த ஒரு பதவியும் ஏற்காது வெளியிலிருந்தவாறு தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவை வழங்க தங்கள் கட்சி முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள இவர் தங்கள் உறவு தி.மு.க.வுடன் தொடர்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளில் (இன்று எல்லா நாடுகளிலும்) திருமணமாகாது இருவர் கூடி வாழ்வதும், வேண்டுமானால் பிரிந்து செல்வதையும் ஒத்ததாக இவரது கருத்து அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. தமிழக வெற்றிக கழகத்தின் ஆட்சிக்கு முதல் ஆறு மாதங்களுக்கு எந்தத் தொந்தரவையும் கொடுக்காது என தி.மு.க தலைவர் ஸ்ராலின் கூறியிருப்பதற்கும், விஜய்யின் ஆட்சிக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் - ஆனால் தி.மு.க.வுடனான உறவு தொடருமென மார்க்ஸிச கம்யுனிஸ்ட் செயலாளர் சண்முகம் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதற்கும் இடையில் ஏதோ ஒன்று தொக்கி நிற்பதை உணர முடிகிறது.
தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியதுபோன்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை அடுத்த ஆறு மாதத்துக்குள் எவ்வாறு கையாளலாம் என்பதில் விஜய் அடையும் வெற்றியே அவரது தேர்தல் வெற்றியை முழுமையாக்கலாம்.
1949ம் ஆண்டு உருவான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சித் தொடரை, திராவிடம் என்ற மாயையுள் சிக்கியிருந்த தமிழகத்தை 51 வயதான ஒருவர் புதிய கட்சி ஆரம்பித்து முதல் மூன்று வருடங்களுக்குள் முதலாவது தேர்தலை சந்தித்து மக்கள் மனதில் அமர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது அரசியலில் மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும்.
விஜய்யின் வெற்றிக்கு இலங்கையிலிருந்து வாழ்த்துகள் பறக்கின்றன. தெற்கிலிருந்து நாமல் ராஜபக்ச உட்பட மலையக மக்களின் பிரதிநிதிகள், இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசிய தரப்பில் தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் சில எதிர்பார்ப்புகளை கோரிக்கைகளாக வைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வழக்கம்போல தடுமாறிக் கொண்டிருப்பதுபோல தெரிகிறது.
தமிழரசுக் கட்சியின் வாழ்த்துகள் அதன் உட்கட்சி முரண்பாட்டை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கட்சியின் தலைவராகத் தெரிவானவரும், நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தவருமான சிவஞானம் சிறீதரன், கட்சியின் தற்போதைய நாடாளுமன்றக் குழுத்தலைவரான இராசமாணிக்கம் சாணக்கிய, கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தனித்தனியாக வாழ்த்துகளை அனுப்பி கட்சியின் ஒழுங்கற்ற அலங்கோல நிலையை கடல் கடந்தும் தெரிய வைத்துள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தில் உள்ள உள்;ராட்சிச் சபைகளும் தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக புதிய முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கக்கூடும்.
தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று நேரடியாக தமிழகத்துக்குச் சென்று தங்கள் வாழ்த்தை தெரிவிக்க முயற்சிக்கலாம். அதற்கு முன்னர் எவரும் எதிர்பாராத விதமாக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தமிழகம் சென்று வாழ்த்துக் கூறும் படங்கள் ஊடகங்களில் வெளிவந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கட்சியின் உத்தியோகபூர்வ வாழ்த்தை அறிக்கையாக விடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.
தேர்தல் காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சனை, இதற்கான தீர்வுத் தேடல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தாமதமாகும் மாகாண சபைத் தேர்தல் போன்ற எதனையுமே தெரிவிக்காத தமிழக வெற்றிக கழகத்துக்கு யாராவது முதலில் பாடம் எடுத்து விளங்க வைக்க வேண்டும். இல்லையெனில் எதனையும் புரிந்து கொள்ள முடியாது பதிலளிக்க முடியாததாகவே நிலைமை அமையலாம்.
தமிழக தேர்தல் மற்றும் தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை பற்றி கிழக்கிலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருடன் இன்று சம்பாசித்தபோது கள நிலைவரத்தை பின்வருமாறு விபரித்தார்:
'இந்தியாவில் திராவிடம் என்ற பெயரில் 1949ல் உருவாகி இதுவரை தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அதே 1949ல் இலங்கையில் உருவான தமிழரசுக் கட்சியும் இப்போது திராவிட அரசியல் நிலைமைக்குத்தான் வந்துவிட்டது. 2001 ஜனவரியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி அதன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியை மூத்த தமிழ்க் கட்சி என்ற நிலையில் தமிழரசுக் கட்சிக்கு வழங்கியது. அதுவே இன்றுவரை அக்கட்சிக்கான பிராணவாயுவாக (லைஃப் சப்போர்ட்) இருந்து வருகிறது. எவ்வளவு காலத்துக்கு பிராணவாயு வழங்கி ஒன்றை தக்க வைத்திருக்க முடியும்" என்று விளங்கும் மொழியில் கூறினார்.
திராவிட மாயையை ஒழிக்க தமிழகத்தில் ஒரு விஜய் வந்ததுபோன்று, தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து முன்னெடுக்க ஒருவர் எப்போது வருவார்? இதற்குக் காத்திருக்க நேருமாயின் உள்ளிருப்பவர்களே கச்சிதமாக தமிழரசுக் கட்சியை முடித்து விடுவார்கள் என்றார் ஆய்ந்தோய்ந்து நோக்கும் அந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்.

Post a Comment