இந்தியாவில் பள்ளி உணவைச் சாட்பிட்ட 150 மாணவர்கள் உடல் நலக்குறைவு!


இந்தியாவின் பீகாரின் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், மாவட்டத்தின் பலுவாஹா கிராமத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. சதர் மருத்துவமனையில் 115 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், மஹிஷி பொது சுகாதார மையத்தில் சுமார் 50 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், பள்ளியில் சமைத்த பருப்பு வகைகள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக சில குழந்தைகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பள்ளியில் இருந்த 545 மாணவர்களில், பாம்பு தென்படுவதற்குள் 200 பேர் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகவும், பின்னர் அவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பள்ளியில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வந்த பிறகே இது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியும், என்று அவர் கூறினார்.

No comments