அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறுகிறது


தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

அந்தத் தளம் எங்குள்ளது என்பதை ஐ.ஆர்.ஜி.சி. குறிப்பிடவில்லை, ஆனால் அமெரிக்கத் தளம் அமைந்துள்ள குவைத் நோக்கி அனுப்பிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகக் குவைத் கூறியுள்ளது.

குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை குவைத் படைகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது; ஆனால், அது தங்கள் இராணுவத் தளத்தைக் குறிவைத்ததா என்பதை அது குறிப்பிடவில்லை.

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியதற்கும், ஹோர்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்குமிடையே இந்த ஈரானிய ஏவுகணை ஏவுதல் நிகழ்ந்தது.

மீண்டும் தொடங்கியுள்ள பகைமை நடவடிக்கைகள், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பலவீனமான போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவது மூன்று நாட்களில் இது இரண்டாவது முறையாகும்.

வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடைபெற்றதாகவும், ஈரான் மீதான முந்தைய அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அந்த இடமே 'மூலமாக' இருந்ததால் அத்தளம் குறிவைக்கப்பட்டதாகவும் ஐ.ஆர்.ஜி.சி கூறியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகாமையிலும் தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஐந்து ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை ஈரானியப் படைகள் ஏவிய சில மணிநேரங்களுக்குப் பிறகு குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ஒரு  போர் நிறுத்த மீறல்" என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

அனைத்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டதாகவும், பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு தளத்திலிருந்து ஏவப்பட்ட ஆறாவது ட்ரோனும் தடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

சென்ட்காம் தனது நடவடிக்கைகளை "அளவான, முற்றிலும் தற்காப்பு சார்ந்த, மற்றும் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்ட" நடவடிக்கைகள் என்று விவரித்தது.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்கத் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, அவை போர் நிறுத்த மீறலாகும் என்றும் கூறினார்.

No comments