மீண்டும் வீட்டிலிருந்து பணி?
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கும் நோக்கில், இலங்கையில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மீண்டும் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை – குறிப்பாக டீசல் நுகர்வைக் – குறைப்பது அரசாங்கத்திற்கு மிக அவசரத் தேவையாக உள்ளதாகவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ரூபாவின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. நாணய மாற்று விகிதம் மேலும் வீழ்ச்சியடைந்தால், மத்திய வங்கி தேவையான தலையீடுகளை மேற்கொள்ளும் என்று அதன் ஆளுநர் எச்சரித்திருந்தார்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலே காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை விடவும், இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்காக மாத்திரம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment