மகிந்த கைது:விசுவாத்தில் சுமா கடிதம்!
சிறீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 'ஏயார்பஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச கைதாகலாமென்ற பரபரப்பு தென்னிலங்கையில் முனைப்படைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனவுக்கு கூட்டு எதிர்க்கட்சி ஒரு விசேட கடிதத்தை அனுப்பியுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராக கடிதம் பிரதம நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, எம்.ஏ. சுமந்திரன் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அடுத்துவருங்காலங்களில் ஊழல்வாதிகள் சிறை செல்வார்களென மகிந்த ராஜபக்ச கைதாகலாமென்ற அடிப்படையில் அனுர திசநாயக்க கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதனிடையே வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானார்.அவருக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதியும் சகோதரனுமான கோத்தபாய ராஜபக்சவும் பிரசன்னமாகியிருந்தார்.
சுமார் இரண்டு மணிநேரம் ஆணைக்குழுவில் தங்கியிருந்த அவர், வாக்குமூலத்தை வழங்கிவிட்டுச் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு 60 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதை கபில சந்திரசேன ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 2 மில்லியன் அமெரிக்க டொலர் தரகுப் பண விவகாரத்தின் ஒரு பகுதியாகவே பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment