யாழ்.போதனா தொடர்பில் அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் முறையற்ற செய்திகள்


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் , மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே முறையற்ற செய்திகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

முதலாவதாக வைத்தியசாலைக்கு வெளியே உள்ள அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு ,அது அனர்த்தம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இரண்டாவதாக வைத்தியசாலை மட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு , அக்குழு, அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்ட மருந்துகளை இருப்பு எடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் மூலம் தீயில் எரிந்த மருந்துகளின் பெறுமதிகள் , களஞ்சியசாலை சேத விபரங்களை கணக்கிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது 

அதேநேரம் , அனர்த்தம் நடைபெற்ற இடம் யாழ்ப்பாண பொலிசாரின் பொறுப்பில் உள்ளது. தடயவியல் விசாரணைகளை ஏற்கனவே அவர்கள் ஆரம்பித்துள்ள நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

விசாரணைகள் முடிவடைந்ததும் அதன் அறிக்கைகளை சுகாதார அமைச்சுக்கு , சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருக்கும் அனுப்பி வைப்போம். 

அத்துடன் , நிரந்தர மருந்து களஞ்சிய சாலையை அமைத்து தருமாறு , சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளோம். 

வைத்தியசாலையில் தற்போது சேவைகள் தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆனாலும் மருத்துவ சேவைகள் தொடர்பிலும் , மருந்துகள் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் முறையற்ற செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் வைத்தியசாலை தொடர்பில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். எனவே மக்கள் அது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

No comments