டென்மார்க் தொடருந்து மோதியதில் 17 பேர் காயம்!
டென்மார்க்கில் இரண்டு உள்ளூர் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று அவசரகால சேவை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.
இச்செய்தியை இன்று வியாழக்கிழமை பொது ஒளிபரப்பு நிறுவனமான டிஆர் தெரிவித்தது.
மரங்கள் நிறைந்த பகுதியில், முன்பக்கத்தில் சேதமடைந்த நிலையில், ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிற்கும் இரண்டு மஞ்சள் மற்றும் சாம்பல் நிற தொடருந்தின் படங்களைக் காட்டியது.
கோபன்ஹேகனுக்கு வடக்கே, ஹில்லரோட் மற்றும் காகெருப் நகரங்களை இணைக்கும் தொடருந்துப் பாதையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு உள்ளூர் தொடருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன என்று மீட்புப் பணிகளுக்கான செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைவரும் தொடருந்துகளில் இருந்து வெளியேறிவிட்டனர். எவரும் தொடருந்துக்குள் சிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு பெருமளவிலான மீட்பு வளங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
காயமடைந்தவர்கள் பின்னர் நோயாளர் காவுவண்டிகளிலும் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

Post a Comment