நில அடையாளத்தை பாதுகாப்பதே சுயநிர்ணய உரிமையின் மூலவேர்! பனங்காட்டான்
இந்த மாதத்தின் 21ம் திகதி முதல் 28ம் திகதி வரையான காலத்தை சமாதான பாதயாத்திரை வாரம் என பிரகடனம் செய்துள்ள சிங்கள தேச அரசுஇ மதங்களுக்கு இடையில் உரையாடல் என்று கூறிக்கொண்டு பௌத்த பாரம்பரியத்தை மேன்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறது. தையிட்டி சட்டவிரோத விகாரையும்இ வெடுக்குநாறிமலையை தொல்பொருள் பிரதேசம் என அறிவித்துள்ளமையும் இதனையே எடுத்துக்காட்டுகிறது.
ஒரு வார சமாதான பாதயாத்திரைக்கான காலம் இந்த வார செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த வார செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் இடம்பெறவுள்ளது. அநுர குமர அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை முன்முயற்சி மற்றும் அரசாங்க சார்பு நிறுவனங்களின் ஆதரவுடன் இது ஏற்பாடாகியுள்ளது.
இனங்களுக்கிடையில் ஆன்மிக மற்றும் கலாசார நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவது இதன் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது. மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவிப்பது இதன் முக்கிய இலக்குகளில் ஒன்று எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
பண்ணக்ககர தேரர் தலைமையிலான பன்னிரண்டு பிக்குகள் அடங்கிய குழு இந்தப் பாதயாத்திரையை அநுராதபுரம்இ தம்புள்ளஇ கண்டிஇ கொழும்பு உள்ளிட்ட பல புனித இடங்களை கடந்து செல்லக்கூடியதாக ஏற்பாடாகியுள்ளது. (இதில் வடக்கு கிழக்கு பகுதிகள் காணப்படவில்லை). பௌத்த பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துவது இந்தப் பாதயாத்திரையின் முக்கியமான குறிக்கோள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு வார பாதயாத்திரைக்கு சமாதான யாத்திரை என்று பெயர். இதற்காக பௌத்த பிக்குகள் பங்குபற்றும் குழு ஒன்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் யாத்த்திரை செய்யும் இடங்களில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் பெயரிடப்படவில்லை. பௌத்த பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துவதற்கே இந்த ஒரு வாரத்தில் முக்கியத்துவம்.
இவைகளின் ஊடாக என்ன அறியப்படுகிறது? இலங்கை ஒரு பௌத்த நாடு. அவர்களின் பௌத்தம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இதற்கான பாதயாத்திரைக் குழுவுக்கு தெரிவானவர்கள் பௌத்த பிக்குகள் மட்டுமே. ஆனால்இ இதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் சமாதான யாத்திரை வாரம். அதாவது அரசியல் நோக்கத்தோடு அவ்வப்போது பிளவுபட்டிருக்கும் பௌத்தர்களை ஒன்றிணைத்து சமாதானப்படுத்துவதற்கான ஒரு வாரமாக இது ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களையும் சமமாக மதித்துஇ அனைத்து மதங்களையும் வேறுபாடின்றி மேம்படுத்துவதே அரசாங்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்று கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசுஇ சமாதான பாதயாத்திரை வாரம் என்ற பெயரில் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை இங்கு அவதானிக்க முடிகிறது.
சிங்கள தேச அரசாங்கம் சமாதான பாதயாத்திரை வாரத்தை ஒரு தேசிய நிகழ்வாக மேற்கொள்ளும் வேளையில்இ தமிழர் பிரதேசங்களில் சிறுபான்மை இனம் ஒன்றின் மத வழிபாட்டுக்கு குந்தகமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை இங்கு குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறையில் தையிட்டி என்ற தமிழ்க் கிராமத்தில் தனியார் காணிகளில் நிறுவப்பட்டுள்ள பௌத்த விகாரையையும்இ வவனியா மாவட்டத்தில் வெடுக்குநாறிமலை என்ற தமிழரின் தொன்மையான வழிபாட்டுத்தல இடத்தையும் பௌத்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தினரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட தமிழரின் காணிகளில் தையிட்டி விகாரை நிறுவப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலையை தொல்பொருள் திணைக்களம் ஊடாக கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆட்சி பீடம் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
தையிட்டி விகாரை அங்கிருந்து அகற்றப்படும்இ அந்தக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றெல்லாம் ஆட்சித்தரப்பினரால் அவ்வப்போது கூறப்பட்டது. நயினாதீவு மற்றும் ஆரியகுளம் நாகவிகாரைகளின் பீடாதிபதிகள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். எனினும் அநுர குமர அரசின் அமைச்சர்கள்இ எம்.பிக்களுக்கிடையில் இது தொடர்பான ஒருமைப்பாடு இல்லை. .
அதேபோன்றுஇ தையிட்டி போராட்டத்தை முன்னெடுத்து வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மற்றைய தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவு இல்லை. இதனால் காணிச் சொந்தக்காரர்களினதும் பொதுமக்களினதும் ஆதரவோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. தமிழரசுக் கட்சி எம்.பியான சிவஞானம் சிறீதரன் இப்போராட்டத்தில் பங்குபற்றி வருகின்றாராயினும் அதனை தமிழரசுக் கட்சியின் ஆதரவு என கூறமுடியாது.
தையிட்டி விகாரையின் காணிச் சொந்தக்காரர்கள் 17 பேர் அதற்கான உறுதிகளோடு இருந்தாலும் அவர்களால்கூட தங்களின் காணிகளை அடையாளம் காணமுடியாதுள்ளது. தையிட்டி விகாரைப் பகுதி காணிகளை அளவீடு செய்ய சம்மதித்தால் அக்காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் அவர்களிடம் இருப்பதால் அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. மறுபுறத்தில் விகாரை அமைந்துள்ள காணிக்குள் எவரையும் அனுமதிக்கப் போவதில்லையென அதன் தலைமைப் பிக்கு சவால் விட்டுள்ளார். இதனால் விகாரை அகற்றும் போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அடுத்து குறிப்பிட வேண்டியது வெடுக்குநாறிமலை மீதான சர்ச்சை. வவுனியா மாவட்டத்தில் ஒலுமடுவவுக்கு அருகாமையிலுள்ள பாலமொட்டை மற்றும் நைனாமடு வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக பக்தர்களால் பூசிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இலங்கை தொல்பொருள் திணைக்களம் திடுதிப்பென இந்த இடத்தில் மையல் கொண்டு இதனை தொல்பொருள் பிரதேசம் என பிரகடனப்படுத்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த இடத்தை வட்டமன பப்பத்தைய விகாரைப் பகுதி எனவும் தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்த மதக் கூற்றுகளுக்கு ஆதரவாக தொல்பொருள் திணைக்களம் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு இங்கு தமிழர்களின் வழிபாட்டை அனுமதித்த போதிலும் பக்தர்கள் அங்கு கூடுவதை பொலிசார் கட்டுப்படுத்தி வந்துள்ளனர். அத்துடன் பௌத்த துறவிகளின் இப்பகுதிக்கான வருகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பௌத்த மேலாதிக்கத்தை இங்கு உறுதிப்படுத்த தொல்பொருள் திணைக்களம் ஆதரவளிப்பதாக காணப்பட்டது.
பல்வேறு இந்துமத அமைப்புகளும் நிறுவனங்களும் இது தொடர்பான கண்டனங்களை மேற்கொண்ட போதிலும் அவர்களின் ஆன்மிக கலாசார பாரம்பரியம் இங்கு ஓரங்கட்டப்பட்டே வந்துள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளை அங்கீகரிப்பவையாக தொடர்ந்து வந்துள்ளன. அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொல்பொருள் திணைக்களத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதே காணப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களம்இ மகாவலி அதிகாரசபை மற்றும் வனபாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றின் செயற்பாடுகள் இங்கு வாழும் சமூகங்களுக்கிடையே இன மன மோதலை உருவாக்கி வருகின்றன. இத்தகைய தலையீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பூராவும் வெவ்வேறு வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளது. இங்குள்ள நிலங்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார்இ முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீண்டும் அரச பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அதற்கு முன்னைய ஆண்டு மகாசிவராத்திரியின்போது இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதும் கவனிக்கப்பட வேண்டியது.
வெடுக்குநாறிமலை என்ற பெயரே தனித்தமிழ் அர்த்தத்தை கொண்டது. கலப்படமற்ற தமிழ்ப்பதம் இது. இங்கு சர்ச்சைக்குரிய தொல்பொருள் தளங்களின் சான்றுகள் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் கூறினாலும் அதனை நிரூபிக்கக்கூடிய எந்த வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால்இ தொல்பொருளியல் பாதுகாப்பு ஒழுங்குகளின் நடைமுறைகள் வெடுக்குநாறிமலைக்கும் அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் அதன் வழிபாட்டுக்குரிய சமூகத்துக்கும் குறைகளை ஏற்படுத்தி வருகிறது.
பௌத்த மதகுருமார்கள் சிறுபான்மை மத சமூகங்களுக்குச் சொந்தமான நிலங்களுக்குள் புகுந்து அவற்றை புனித பிரதேசங்கள் எனவும்இ பௌத்த ஸ்தலங்களை மீட்nடுத்து வருவதாகவும் விளம்பரப்படுத்தும் தன்மை தமிழர் பிரதேசங்களில் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பல மாவட்டங்களில் புதிதாக ஆவணப்படுத்தப்படும் இத்தகைய வடிவம் அரசாங்க ஆதரவுடன் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்கி காலக்கிரமத்தில் மோதல்களை உருவாக்கி விடுமென அச்சமடைய வைக்கிறது.
ஒருபுறத்தே சமாதான பாதயாத்திரையை உருவாக்கி ஊக்குவிக்கும் அநுர அரசுஇ முன்னைய சிங்கள அரசுகள் எதற்கும் குறையாத வகையில் இன-மத மோதல்களுக்கு வழியமைத்து வலுவூட்டி வருகிறது.
பாடுவது தேவாரம்இ இடிப்பது சிவன் கோவில் என்று தமிழில் அர்த்தமுள்ள மொழியாடல் ஒன்றுள்ளது. சமாதான வார கொள்கையும் அந்தப் பிரகடனம் தொடர்பான பாதயாத்திரையின் குறிக்கோளும் நடைமுறையில் பௌத்தத்தை மேன்மைப்படுத்தி மற்றைய மதங்களை கீழ்மைப்படுத்துவதாகவே அமைவதை காணமுடிகிறது. இதற்கு உடந்தையாக தொல்பொருள் திணைக்களத்துக்கு முழு உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் மூலம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் கதிரைகளை நம்பி அரசியல் வியாபாரம் செய்யும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தங்களுக்குள்ள பொறுப்பை மறந்துவிடக்கூடாது. நில அடையாளத்தை பாதுகாப்பதே சுயநிர்ணய உரிமையின் மூலவேர் என்பதை மறந்தால் மிஞ்சப்போவது எதுவுமாக இருக்காது. ஆண்டாண்டு தோறும் ஒரு சமாதான யாத்திரை வந்து போகும். தமிழ் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கப்பட்டு செல்லும்.
Post a Comment