துணைகுழுக்களிற்கு வழங்கிய ஆயுத கணக்கு தெரியாதாம்?
டக்ளஸ் குழு மற்றும் கருணா-பிள்ளையான் குழுக்கள் உள்ளிட்ட துணை ஆயுதக்குழுக்களிற்கு கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீளளிக்கடவில்லையென இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே வழங்கப்பட்டு காணாமல் போயுள்ள துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் கணக்குகள் குறித்த முழுமையான அறிக்கை, குற்றப் புலனாய்வுத் துறையால் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது தொடர்பான வழக்கில் பிள்ளையானை முதல் சந்தேக நபராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத கடத்தலுக்குப் பிறகு, அவர் மட்டக்களப்புப் பகுதியில் உள்ள ஒரு சித்திரவதைக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தில் இணைந்த கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு, புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் வழங்கிய பெருமளவிலான துப்பாக்கிகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வழங்கப்பட்ட ஆயுதங்களில், போர் முடிவடைந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவை மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் எனும் இந்த சந்தேக நபர், செவனப்பிட்டிய பகுதியில் ஒரு சித்திரவதை முகாமை நடத்தி வந்துள்ளார்.
பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினர் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, கடுமையான சித்திரவதை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியரும் இதே இடத்தில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக இரண்டு சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சில கொலைகளுக்குப் பிறகு, உடல்கள் அதே முகாமில் புதைக்கப்பட்டதாக தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிள்ளையானிற்கு 352 ரி-56 ரக துப்பாக்கிகளையும், 9மிமீ ரக துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

Post a Comment