பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனிலும் பிரச்சினை!
பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதே ஹேக்கர்களே இந்த ஆவணங்கள் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
காணாமல் போயுள்ள கோப்புகள் பிரான்ஸ் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை தொடர்பானவை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றுமொரு பாரிய நிதி மோசடியை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கொடுப்பனவு மோசடியும் இதே திணைக்களத்தின் ஊடாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment