அழைப்பில்லை:டக்ளஸிற்கோ கவலை!
இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிராத நிலையில் அவருடனான சந்திப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அச்சந்திப்பானது தமக்கிடையிலான 'குடுமிச் சண்டைக்கு'த் தீர்வு கோருவதாகவே அமைந்திருந்தது என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கை வந்திருந்தபோது, அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளையோ அல்லது அரசியல் அபிலாசைகளையோ வலியுறுத்துவதற்குப் பதிலாக, தமக்கிடையே இருக்கும் உட்கட்சிப் பூசல்களையும் முரண்பாடுகளையும் அவரிடம் முறையிட்டுத் தீர்வு கேட்டதாகவே சந்திப்பு அமைந்திருந்தது. அது எனக்கும் எமது மக்களுக்கும் மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது" என டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் தரப்பினர் வழமைபோலத் தமது சுயலாப அரசியலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இச்சந்திப்பையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகவே தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பார்கள். அதையாவது இவர்கள் அழுத்தம் கொடுத்துக் கேட்டிருக்கலாம். ஆனால், ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கும்போது, இவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது தெளிவாகிறது" எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment