கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கிட்டுமா?
அல்லைப்பிட்டியில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான்; குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார்.
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த இலங்கை காவல்துறையினர் தமது கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தினார் என காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவனான அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, கடந்த வழக்கு தவணையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து, நீதிமன்று, விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு காவல்துறை அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் பல வழக்குகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதனால், கடும் வேலை பளு காரணமாக வழக்கு விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திற்கு பரப்படுத்துவதாக கடந்த 07ஆம் திகதி திகதியிடப்பட்ட கடிதம் ஊடாக மன்றுக்கு காவல்துறை அதிபர் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் வழக்கினை பாரமெடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது, மத்திய குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி, ஊர்காவற்துறை காவல்துறையின் குறிபேடுகள் , விசாரணை அறிக்கைகள், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை தாம் பாரம் எடுத்துள்ளதாகவும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றிக்கைக்கு அமைவாக துப்பாக்கிகளை, யாழ்ப்பாண தலைமை காவல்நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.

Post a Comment