வெறும் வாய் சப்பும் இனவாதிகளுக்கு சுரேஸ் சாலே நல்ல அவலாகியுள்ளார்!பனங்காட்டான்


நாய் எங்கு காயப்பட்டாலும் தனது கால்களைத் தூக்கிக் கொண்டே ஊளையிடும். சில இனவாத அரசியல்வாதிகளுக்கு எந்த விடயமானாலும் அதில் விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் இருப்பதாகவே தெரியும். கனவிலும் மாற்ற முடியாத தீராவியாதி இது. 

தமிழ் மக்கள் தொடர்பாகவும் அவர்களின் தமிழ் தேசிய செயற்பாடுகள் தொடர்பாகவும் இனவாதம் கக்கி வருபவர்களுக்கு அவ்வப்போது புதிது புதிதாக ஏதோ ஒன்று கிடைத்துவிடும்.

இலங்கையின் அரச புலனாய்வு பணிப்பாளராகவிருந்த சுரே~; சாலேயின் கைது இப்போது இவர்களுக்கு ஓர் ஆயுதமாகக் கிடைத்துள்ளது. ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி வகித்த இவர் கடந்த காலங்களில் - முக்கியமாக ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் செல்லப்பிள்ளையாக இருந்தவரென கூறப்படுவதுண்டு. 

ஈஸ்டர் நாளில் கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை இடம்பெறும். 2019 ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 269 அப்பாவிப் பொதுமக்களும் 45 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர். 

தேசிய தௌவீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய அமைப்பும் சர்வதேச இஸ்லாமிய அமைப்பும் இதில் சம்பந்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. 2019 மார்ச் 15ம் திகதி கிறீஸ்சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் எதிரொலியாக ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அப்போதைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்த்தன (ரணில் விக்கிரமசிங்கவின் தாய்மாமன் மகன்) அறிவித்திருந்தார். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நீதியும் நேர்மையுமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து தெரிவித்து வந்தது. கைதாகி தடுப்புக் காவலில் இருக்கும் பிள்ளையானிடம் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக அரசல்புரசலாக செய்திகள் வந்ததுண்டு. இருப்பினும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஏழு வருடங்களுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் வேளையில் சுரேஸ் சாலே கைதாகி 90 நாட்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கலாகவில்லை. இப்போதைக்கு இவர் சந்தேக நபர் மட்டுமே. எவர் ஒருவரையும் விசாரணைக்காக அழைக்கவும் கைது செய்யவும் நீதிமன்ற உத்தரவு பெற்று தடுத்து வைத்திருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. பயங்கரவாத தடைச்சட்டம் இப்போதும் இருப்பதால் இவ்விடயங்களில் காலநீடிப்புக்கும் இடமுண்டு. 

இதெல்லாம் நன்கறிந்த, இவ்விடயங்களில் நேரடி அனுபவமுள்ள முன்னாள் எம்.பிக்களும் முன்னாள் அமைச்சர்களுமான சிலர், சுரேஸ் சாலேக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு, வழமையான இனவாத விசத்தை கக்க ஆரம்பித்துள்ளனர். 

கோதபாயவின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்து அவரது ஜனாதிபதி காலத்தில் நீதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரியே முதலில் குரல் கொடுத்தவர். தமது முன்னாள் எஜமான் கோதபாய கைது செய்யப்படலாம் என்ற அச்ச உணர்வு இவரது முதல் குரலுக்கு காரணமாக இருக்கலாம். 

அடுத்துக் குரல் கொடுத்தவர்கள் மூவர். முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர்;. ராஜபக்சக்கள் குடும்பத்தோடு இரண்டறக் கலந்திருந்த முதல் இருவரும் ஏதோ காரணத்தால் கோதபாயவுடன் முரண்பட்டு அவரிடமிருந்து பிரிந்து சென்ற முக்கியமானவர்கள். கோதபாய துரத்தப்பட்டபோதும் தப்பியோடியபோதும் ஜனாதிபதி பதவியை துறந்தபோது அதனைப் பார்த்து ரசித்த இவர்கள் இப்போது சுரேஸ் சாலேக்காக குரல் கொடுப்பதற்கு வேறு காரணங்கள் உண்டென்று விடயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 

அடுத்தவர் சரத் வீரசேகர. முன்னாள் கடற்படை அதிகாரி. போர்க்காலத்தில் கடல் வலயப் பாதுகாப்பில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி விடுதலைப் புலிகளை அழிப்பதில் முன்னின்றவர். கோதபாயவின் ஆலோசனைக் குழுவான வியத்மகவில் முக்கியமாகவிருந்தவர். இந்த மூவர்களோடு இன்னொரு முன்னாள் அமைச்சரான எஸ்.பி.திஸநாயக்கவும் இறுதியாக இணைந்துள்ளார். இவர் முன்வைத்துள்ள வாதம் சுரேஸ் சாலேயின் கைதினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறதென்பது. இந்தக் கைதினால் அநுர அரசை ஒரு சுனாமி சுற்றியடிக்கப் போகிறதென்றும் எச்சரித்துள்ளார். 

எஸ்.பி.திஸநாயக்க தவிர்ந்த மற்றைய மூவரும் எதற்கெடுத்தாலும் கூச்சல் போடுவதில் ஒத்த கருத்துடையவர்கள். நாமல் ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இரண்டில் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்பட்டவர். இப்பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களும் பிரித்தானியாவிலுள்ள தமிழர் அமைப்புகளும் ராஜபக்சக்களின் ஆட்சிக்கால படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை மறுத்ததையும் சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்சவின் உரையை நிறுத்தக் கோரினர். அவ்வாறே அவை நிறுத்தப்பட்டன. 2010ம் ஆண்டில் நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்சவும் பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆற்றவிருந்த உரை தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்பினால் ரத்துச் செய்யப்பட்டதை மறந்துவிட முடியாது. 

நாமல் ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டதை விடுதலைப் புலிகளை  ராஜபக்சக்கள் ஒழித்துக் கட்டியதன் எதிரொலி என உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் உடனடியாக கருத்துத் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கிய ராணுவத்தைக் காட்டிக் கொடுப்பதா என்ற கேள்வியும் இவர்கள் கருத்தில் முதன்மை பெற்றது. 

புலம்பெயர்ந்துள்ள தமிழ் சமூகத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவா இவ்வாறான தடைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் இவர்களுடையது. 

கடந்த பொதுத்தேர்தலின்போது தங்களின் சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட இந்த இனவாதிகள், விடுதலைப் புலிகள் - புலம்பெயர் தமிழர் என்ற பெயர்களை எடுத்து சிங்களவர்களிடையேயுள்ள இனவாதிகளை உசுப்பேத்தி மீண்டும் இனஅழிப்புகளை ஆரம்பித்து அதில் குளிர்காய முனைவது தெரிகிறது. 

அநுர குமர திஸ்ஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது எனப் படம் காட்டி, புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பக்கமே இன்றைய ஆட்சி செயற்படுகிறது எனவும் காட்டுவதற்கு படாதபாடு படுகின்றனர். 

சுரேஸ் சாலேயின் கைது ராஜபக்சக்களை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளது என்பதை கொழும்பிலிருந்து வரும் ஊடகங்களின் ஊடாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிக்கையையும் ராஜபக்சக்களோ அல்லது அவர்களின் பொதுஜன பெரமுனவோ தெரிவிக்கவில்லை. உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோரின் உளறல்களால் தங்களுக்கு மேலும் நெருக்கடிகள் ஏற்படலாமோ என்ற அச்சம் ராஜபக்சக்களிடம் காணப்படுகிறது. 

கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அப்போது அறிவித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, எதற்காக சுரேஸ் சாலே கைது செய்யப்பட்ட விடயத்தில் அவசரப்பட்டு கருத்துக் கூறினார் என்ற கேள்வியும் பெரமுனகாரரிடம் எழுந்துள்ளது. 

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து வந்திருக்கும் கோரிக்கை நியாயமானது. இது தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ இடையூறு விளைவிக்கவோ வேண்டாமென்று கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. (கத்தோலிக்க திருச்சபை இங்கு சுட்டிக்காட்டுவது அந்த மூவரை நோக்கியே என்பதை பெயர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை). 

ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட மனிதப் படுகொலை எனப்பார்க்கும் கத்தோலிக்க திருச்சபை, சுரேஸ் சாலே கைது தொடர்பாக தேவையற்ற வியாக்கியானங்களை நிராகரிக்கிறது. இதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டுமெனவும் கோருகிறது. 

ஆரம்பிக்கப்பட்டிருக்கும் விசாரணையை குழப்ப முயற்சிப்பதானது இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்க வேண்டும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் சுதந்திரமான விசாரணை இது. எனவே இதனை அரசியல் மயமாக்காமல் விசாரணைகள் அதன் போக்கில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்க வேண்டுமென்று திருச்சபையின் வேண்டுகோள் சுட்டிக்காட்டியுள்ளது. 

உண்மையைக் கண்டறியவும் நீதியான விசாரணைக்கும் ஏழாண்டுகள் காத்திருந்த பாதிப்புக்குள்ளான கத்தோலிக்க சமூகம் சுயாதீனமான குற்றப் புலனாய்வுத்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை வைத்திருப்பதை இந்த அறிக்கையினூடாக கண்டறிய முடிகிறது. 

உண்மை கண்டுபிடிக்கப்படாதிருக்க வேண்டுமென்ற நோக்குடன் குறுகிய அரசியல் பார்வையிலும் இனவாத நோக்கிலும் தம்;மிஸ்டப்படி அறிக்கை விடும் அரசியல்வாதிகள் கத்தோலிக்க திருச்சபையின் வேண்டுகோளை ஏற்று புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம். 

இதனைப் புரிந்து கொள்ளாது எதற்கெடுத்தாலும் எடுத்த எடுப்பில் விடுதலைப் புலிகளையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் இனவாதத்துக்குள் வம்புக்கிழுப்பவர்களைப் பற்றி என்ன சொல்லலாம். 

நாய்க்கு எங்கு காயம் ஏற்பட்டாலும் அது கால்களைத் தூக்கிக் கொண்டே ஊளையிடும். இனவாத அரசியலையே கனவிலும் கொள்ளும் சிலர், புலிகள் - புலம்பெயர் தமிழர் என்று கூச்சலிட்டுக் கொண்டேயிருப்பார்கள். இது அவர்களுக்கு தீராவியாதி.

No comments