கடற்கரை மற்றும் தீவுகள் தாக்கப்பட்டால் பாரசீக வளைகுடாவில் மிதக்கும் கண்ணிவெடிகளை போடுவோம் - ஈரான்


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் தெற்குக் கடற்கரை மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவை ஆக்கிரமிக்க முயன்றாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் திங்களன்று எச்சரித்தது.

ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், வளைகுடாவில் உள்ள அனைத்து அணுகு வழிகளிலும், கடற்கரையிலிருந்து ஏவப்படக்கூடிய மிதக்கும் கண்ணிவெடிகள் உட்பட பல்வேறு வகையான கடல் கண்ணிவெடிகளைப் புதைக்க வழிவகுக்கும் என ஈரான் கவுன்சில் அறிக்கை தெரிவித்தது.

இந்த நிலையில், முழு வளைகுடாவும் நடைமுறையில் ஹோர்முஸ் ஜலசந்தியைப் போன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கும் என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.

தெஹ்ரான் நடவடிககை எடுக்க நிர்பந்திக்கப்பட்டால், இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று அந்த அறிக்கை கூறியதுடன், 1980களில் [ஈரான்-ஈராக் போரின் போது] ஜலசந்தியைத் திறக்க முயன்ற 100 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் சந்தித்த சிரமத்தையும் அது சுட்டிக்காட்டியது.

அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸின் தகவல்படி, ஈரான் நீரிணையை மீண்டும் திறக்க தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அதன் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது முற்றுகையிடுவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 

இன்று திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், போரில் ஈடுபடாத நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்லலாம், ஆனால் முதலில் ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாதுகாப்பு மன்றம் மீண்டும் வலியுறுத்தியது.

No comments