ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தரை வாகனம் மீது மோதியது: விமானிகள் உயிரிழப்பு! பலர் காயம்!
லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஒரு பிராந்திய பயணிகள் விமானம் தரை வாகனம் மீது மோதியதால், விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு, பரவலான விமானப் போக்குவரத்து தடைபட்டது. இந்தச் சம்பவத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பிராந்திய விமானம் ஒன்று தரை வாகனம் மீது மோதியதாக , விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது. இந்த மோதலை நியூயார்க் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது.
காவல்துறையினரால் இயக்கப்படும் தீயணைப்பு வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், விமானத்தின் இரண்டு விமானிகளும் உயிரிழந்ததை நியூயார்க் துறைமுக ஆணைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் காயமடைந்ததாகவும், 41 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலானோர் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
திங்கட்கிழமை கிழக்கு நேரப்படி பிற்பகல் 2 மணி (18:00 GMT) வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், லாகார்டியாவின் இணையதளம், வந்து சேரும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படுவதையும், மற்றவை தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் சென்றதாகவும் காட்டி வருகிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்புவதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

Post a Comment