நேபாளம் ஊடாக இத்தாலி செல்ல முயன்ற யாழ். வாசி - பயணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் இலங்கை திருப்பும் போது கைது
நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது.
நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களுடன் சென்ற மற்றுமொரு இளைஞர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.
இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்தடைந்த மேற்படி இளைஞர், அங்கிருந்து படகு மூலம் மீண்டும் இலங்கைக்குத் தப்பி வர முயன்றுள்ளார்.
இதன்போது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குடத்தனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இந்தியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment