பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான்


அமெரிக்காவைத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது ஆக்கிரமிப்பில் பங்கேற்பதற்குச் சமம் என பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பருடன் தொலைபேசியில் பேசியபோது, ​​பிரிட்டனின் இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிப்பது ஆக்கிரமிப்பில் பங்கேற்பதாகக் கருதப்படும் என்று எச்சரித்தார்.

அனைத்து சர்வதேச கோட்பாடுகள் மற்றும் விதிகளுக்கு முரணாக, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் எங்கள் நாட்டைத் தாக்கின என்று அராக்சி தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தை மீறும் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஐக்கிய ராச்சியமும் சில ஐரோப்பிய நாடுகளும் கடைப்பிடிக்கும் எதிர்மறையான மற்றும் ஒருதலைபட்சமான அணுகுமுறையை அவர் விமர்சித்தார்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51வது பிரிவின் கீழ் ஈரானுக்கு உள்ள தற்காப்பு உரிமையை வலியுறுத்திய வெளியுறவு அமைச்சர், நாங்கள் அண்டை நாடுகளின் இறையாண்மையை மதித்துள்ளோம், அவர்களைத் தாக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த நாடுகளில் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்தத் தளங்களில் இருந்து நாங்கள் தாக்கப்படுகிறோம் என்று கூறினார்.

இந்தச் செயல்கள் நிச்சயமாக ஆக்கிரமிப்பில் பங்கேற்பதாகவே கருதப்படும். மேலும், இவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றில் பதியப்படும். அதே சமயம், நாட்டின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான எங்களது உள்ளார்ந்த உரிமையை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம் என அவர் மேலும் கூறினார்.


ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் உட்பட, மோதலின் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து கூப்பர் கவலை தெரிவித்தார்.

No comments