சுரேஸ் சாலே:வெளியே வருகின்றதா பூனை!



முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சூழல், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றின் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் கைது பார்க்கப்படுகிறது. 

அதனை வெறும் தனிநபர் சார்ந்த சட்ட நடவடிக்கையாகக் கடந்துவிட முடியாது. மாறாக, அரசியல் பொறுப்புக்கூறல், பாதுகாப்பு அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய முச்சந்தியில் நிற்கும் ஒரு நிகழ்வாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பாதுகாப்புப் பிரிவின் உச்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமையானது, "பாதுகாப்புத் துறையினர் தங்களின் கடந்தகாலச் செயற்பாடுகளுக்காக எந்தளவுக்குப் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது?" என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது. இது பாதுகாப்புத் துறைக்குள் நீண்டகாலமாக நிலவி வந்த 'தண்டனையிலிருந்து விலக்களிக்கும்' கலாசாரம் மாற்றமடைந்து வருவதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

தமது கைது சட்டவிரோதமானது என்றும், அது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் வாதிட்டு சுரேஸ் சலே தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, புலனாய்வுத் துறையிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அவசியம் குறித்து நீதிமன்றத்தின் நேரடிக் கவனத்திற்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் மீது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சலேவுக்கு எதிராகப் பலமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் நிலையில், இந்த அடிப்படை உரிமை மனு மீதான விவாதம், எதிர்மறையான விளைவுகளைக்கூட ஏற்படுத்தலாம்.

இலங்கை அரசியலில் நீண்டகாலமாக உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நேரடிச் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது அரிதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மைக்கால நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் நகர்வுகள், அந்த "அரசியல் பாதுகாப்பு வளையம்" மெல்லத் தளர்ந்து வருவதைக் காட்டுகின்றன.


No comments