பாலைதீவு - இருவர் பலி:இருவர் அதிதீவிர சிகிச்சையில்!



யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு  இன்று வெள்ளிக்கிழமை  விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.அதேவேளை மேலும் இருவரது உடல் நிலை மிக மோசமான கட்டத்திலுள்ள யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்விழாவில் பிரதான உற்சவ நிகழ்வு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கடல் வழியாகப் பயணித்துவருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடலில் மூழ்கியதில் படகிலிருந்த யாத்திரிகர் இருவர் உயிரிழந்துள்ளனர்.படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ள நிலையில் ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகி இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பாலைதீவை சூழ உள்ள கிளிநொச்சி மன்னார் மற்றும் யாழ்மாவட்டங்களிலிருந்து சுமார் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான பக்தர்கள் ஆண்டு தோறும் உற்சவத்திற்காக கடல் வழி பயணித்து செல்வது வழமையாகும்.


No comments