பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள்!



யாழ். பல்கலைக்கழக கறுப்புக்கொடி விவகாரம்: மாணவர்களுக்கு ஆதரவு வழங்க சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

​கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி  யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூன்று மாணவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கிய பின்னர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

​குறித்த மூன்று மாணவர்களிடமும் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. திணைக்களத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தேவையேற்படின் பொலிஸார் மாணவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி மணிவண்ணன், "பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் சட்டப்போராட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சட்டத்தரணிகள் வழங்குவார்கள் என அவர் உறுதிப்படக் கூறினார்.

​இந்தச் சட்ட உதவி வழங்கும் பணியில் சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments