ஒருமித்த தலைமைத்துவம் இல்லாதுள்ளதே பிரச்சினை!
2009-இல் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, ஒருமித்த தலைமைத்துவம் இல்லாத சூழலில் தமிழ் அரசியல் தரப்புகள் மீண்டும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் சுயநல நோக்கங்களையும் முன்னிறுத்தத் தொடங்கியுள்ளன. தமிழினம் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு தெளிவான இலக்கோடும், உறுதியான ஒற்றுமையோடும் செயற்பட்டிருந்தால், இன்று அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஒரு மேன்மையான நிலையை எட்டியிருக்க முடியும் என்பதே நிதர்சனமாகுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
இலங்கையில் மாறிமாறி வரும் ஆட்சி அதிகாரங்கள் எத்தகையதாக இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் தென்னிலங்கை அரசு இயந்திரம் மிகத்தெளிவான மற்றும் உறுதியான பொறிமுறையைக் கொண்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல் தலைமைகளான மகிந்த ராஜபக்ச முதல் தற்போதைய அநுர குமார திசாநாயக்க வரை அனைவரும் தமிழர் விவகாரத்தில் ஒரே விதமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையின் ஊடாகச் செயல்படும் வேளையில், தமிழர் தரப்பு தமக்குள் நிலவும் தலைமைத்துவப் போட்டி மற்றும் குரோத உணர்வுகள் காரணமாக ஒருமித்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியாமல் தடுமாறுகின்றது.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படும் அரச கடிதங்கள் இன்றும் சிங்கள மொழியிலேயே வருகின்றன. வர்த்தமானி அறிவித்தல்கள் கூட நீண்ட தாமதத்திற்குப் பின்னரே தமிழில் வெளியாகின்றன.தமிழ் மக்களின் கல்விப் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு முறையான அங்கீகாரமோ அல்லது பாதுகாப்போ இல்லாத நிலை தொடர்கின்றது." எனவும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment