கோத்தா நீதிமன்று வருவாரா? 10வருடம் !
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 10வருடங்கள் அண்மித்துள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கிலேயே இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் 10வருடங்கள் அண்மித்துள்ள நிலையில் வாக்குமூலம் பெறுவது தொடர்பிலான கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முயன்ற லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து சாட்சியமளிக்க அவர் தொடர்ந்து மறுத்து வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திற்கு வர முடியாவிடின் அது குறித்த சத்தியக் கடதாசியைத் தாக்கல் செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் தமது எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தைப் பெறுவது தொடர்பான இறுதி நடைமுறைக் கட்டளை ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Post a Comment