இலங்கை மின்சாரசபை விற்பனைக்கு?



நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

முன்பு மின்சார சபையின் 23,000 தொழிலாளர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட மாட்டோம் என்று மக்களை ஏமாற்றி, இன்று அரச அதிகாரத்தை கைப்பற்றி மின்சார சபையை பல நிறுவனங்களாக பிரித்து வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் சீர்திருத்தமும் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இந்நிறுவனத்தை இல்லாதொழிக்க மக்கள் இடமளிக்கவில்லை. தேசிய நிறுவனங்களை பாதுகாக்கவே மக்கள் இடமளித்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


நாட்டின் மின்சக்தித் துறை தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது என்பதால், இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இதை விட அதிக சிந்தனையுடனும் பொறுப்புணர்வுடனும் மற்றும் வகைகூறலுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்று 23,000 தொழிலாளர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களை பலிகடாக்கி ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அதிகாரத்தை பெற்று அதிகார ஆடம்பர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு தற்போதைய ஆளும் தரப்பினர் மின்சார சபையையும் தொழிலாளர்களையும் அனாதையாக்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இவ்வாறு பொய் சொன்னது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம். இந்த மறுசீரமைப்புகளுக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்தே எதிர்த்த தற்போதைய அரசாங்கம், இன்று மக்கள் ஆணையை காட்டிக்கொடுத்துள்ளது. இந்த மறுசீரமைப்புகளை தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்து அவர்களினது வேலைவாய்ப்பைப் பாதுகாத்துக்கொண்டு  முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


ஏற்கனவே நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை அழித்த இந்த அரசாங்கம் இப்போது மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது. நமது நாட்டின் ஆற்றல் துறையை ஆபத்தில் தள்ளி, மின்சார சபையின் 23,000 பேரின் எதிர்காலத்தை இந்த அரசாங்கம் இருளுக்கு இட்டுச் சென்றுள்ளது. இனியாவது இவர்களால் ஏமாற வேண்டாம். இது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

No comments