17வயதா? 19வயதா? :குழப்பத்தில் காவல்துறை
ஊர்காவற்துறை - அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் முன்னர் தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.
காவல்துறையினரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வானை நிறுத்த காவல்துறையினர் சமிக்ஞை செய்தபோது, வான் தொடர்ந்து சென்றது.
காவல்துறையினர் வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வானில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்து பின்னர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வானில் இருந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தேக நபரையும், சித்தங்கேணிபகுதியைச் சேர்ந்த 38 வயதான சந்தேக நபரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபர்கள் இன்று (11) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நேற்று (10) நீதிவான் விசாரணையின் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment