சுரேஷ் சலே கைது - நிலக்கரி ஊழலை மறைக்க அரசு எடுக்கும் முயற்சியா?
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது மற்றும் நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமாயின், தற்போதைய பாதுகாப்பு தரப்பில் உள்ள முக்கிய அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தத் திடீர் கைது நடவடிக்கை என்பது நாட்டில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலக்கரி ஊழலை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியே என எதிர்க்க தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்:
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அவர் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது. அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். எனவே, இந்த விசாரணையை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா:
"நிலக்கரி மோசடியை மூடிமறைப்பதற்காகவே இப்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான கைதுகளின் மூலம் நிலக்கரி ஊழலை ஒருபோதும் மறைக்க முடியாது. அரசாங்கம் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்."எனத் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர வன்மையாகக் கண்டித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமது எக்ஸ் கணக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சலே இலங்கையில் மூன்று தசாப்த கால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த மற்றும் திறமையான இராணுவ அதிகாரி ஆவார்.
இவ்வாறானதொரு அதிகாரியை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலுக்கு உட்படுத்துவது, அதன் நேர்மை, நோக்கம் மற்றும் அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது குறித்த கடுமையான கவலைகளை ஏற்படுத்துகிறது
நம்பகமான சாட்சியங்களுக்குப் பதிலாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதியைச் சீர்குலைப்பது மட்டுமன்றி, இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது
நீதி என்பது வெளிப்படையானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், எவ்வித தலையீடுகளும் அற்றதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாகச் செய்யப்படும் எச் செயலும், அதனைச் செய்பவர்கள் மீது நீங்காத கறையை ஏற்படுத்தும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை முறியடித்தமை, விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை இலக்கு வைத்துப் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை மற்றும் 'கே.பி' போன்ற விடுதலைப் புலித் தலைவர்களைக் கைது செய்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி
நாட்டிற்கு மிகவும் சவாலான காலப்பகுதிகளில் தமது உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய அதிகாரிகள், இன்று அரசியல் விவாதங்களுக்குள் இழுத்து வரப்படுகின்றமை பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு விடயம்
ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல் என்பது அவசியமானது என்ற போதிலும், அது நியாயமான முறையிலும், எல்லைகளுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்
அத்துடன், அரசியல் லாபங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்துவதானது, இலங்கையின் நம்பகத்தன்மைக்கும் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தேசியப் பாதுகாப்பானது அரசியல் மோதல்களின் பககவிளைவாக மாறிவிடக் கூடாது
இலங்கை உண்மையையும் நீதியையும் தேடிப் பயணிக்க வேண்டும். ஆனால், அது சட்டம், சாட்சியங்கள் மற்றும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ உருவாக்கப்படும் நாடகத்தனமான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Post a Comment