ஜனாதிபதி அநுரவின் காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் – ஞா. சிறிநேசன்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் நேற்று புதன்கிழமை (28) மகிழடித்தீவில் உள்ள நினைவுத்தூபியருகே நடைபெற்றது.

மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் ஏற்பாட்டில் பிரதேசசபையின் தவிசாளர் இ.கிரேஸகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்தியடைய வேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கொக்கட்டிச்சோலை மற்றும் மகிழடித்தீவு ஆகிய இரண்டு கிராமங்களில் 1987ம் ஆண்டிலும் 1991ம் ஆண்டிலும் 180க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இங்கு இருக்கின்ற இராணுவத்தினர் அதிரடி படையினரின் மூலமாகத்தான் படுகொலைகள் நடைபெற்றது என்பது ஊர் அறிந்த விடயம் வெட்ட வெளிச்சமாக பல சாட்சியங்கள் முன்னாக நடைபெற்ற இந்த படுகொலைகள் இருந்தும் கூட இதுவரைக்கும் அந்த மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை நீதி கிடைக்கவில்லை.

பட்டப் பகலில் பல கண்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த படுகொலை குறிப்பாக 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையை எடுத்து பார்ப்போம் என்றால் கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கடந்து இருக்கின்றது 1991 ஆம் ஆண்டு படுகொலையை எடுத்துப் பார்க்கின்றபோது 35 ஆண்டுகள் கடந்து இருக்கின்றன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்திலும், பிரேமதாசா அவர்களின் ஆட்சி காலத்திலும் இந்த படுகொலைகள் நடைபெற்றன.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் லலித் அத்துலத்முதலி அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் பிரேமதாசா அவர்களின் ஆட்சி காலத்தில் ரஞ்சன் விஜயரத்தின அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இந்தக் காலத்தில் வகை தொகை இல்லாமல் அதாவது 3 வயது குழந்தையில் இருந்து பெண்கள் ஆண்கள் வயோதிபர்கள் மற்றும் இளைஞர்கள் என்கின்ற பேதம் இல்லாமல் அனைவரும் தமிழர்கள் என்கின்ற காரணத்திற்காக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டும் கூட எத்தனை அரசாங்கங்கள் மாறி இருக்கின்றன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, டிங்கிரி பாண்டா விஜயதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க இப்போது அனுர குமார திசாநாயக்க வந்திருக்கின்றார்.

ஆகவே இவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட நீதியின் பக்கமாக அவர்கள் கண் திறக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. இப்போது இறுதியாக அனுரகுமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதும் கொன்றவர்கள் இராணுவத்தினர் அதிரடி படையினர் என்பதும் வெளிப்படையான உண்மை அந்த காலத்தில் இங்கு பணிக்கு வந்தவர்கள் இந்த பொறுப்புக்குரியவர்கள் யார் என்பது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்.

எனவே சட்டவாட்சி சமத்துவமான ஆட்சி என்று சொன்னால் இந்த கொல்லப்பட்ட மக்களுக்குரிய நீதி அல்லது அவர்களுக்குரிய தீர்ப்பு என்பது கிடைக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் மிகவும் மன வேதனையுடன் கூறிக் கொள்கின்றேன்.

No comments