நிமலராஜன் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!



ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கு - கிழக்கில் பல்வேறுபட்ட ஆயுத குழுக்களின் தாக்கங்களினால் பல்வேறுபட்ட அப்பாவி மக்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள்.

வடக்கில் கடத்தல்கள் பல காணாமல்போன சம்பவங்களுக்கு பொறுப்பாக ஈ.பி.டி.பி கட்சி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பான விடயத்திலும்சரி, பல்வேறு கடத்தல்களோடு சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்ட விடயங்களிலும்சரி, பத்திரிகை ஆசிரியர் அற்புதனின் படுகொலையாக இருக்கலாம், கே எஸ் ராஜாவின் படுகொலை, இன்னும் பல படுகொலைகளுக்கு காரணமாக ஈ.பி.டி.பியினர் இருந்ததாக மக்கள் பலர் குற்றச்சாட்டுகின்றார்கள்.

அதாவது ராஜபக்சவின் ஆட்சிக்காலம் சந்திரிகாவின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பியினர் அவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டுகின்றார்கள்.

எனவே அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. கைது செய்யப்படுகின்றவர்கள் அப்பாவிகளாக இருந்ததால் தப்பிக் கொண்டனர்.

ஆனால் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் சார்பாக சொல்லிக் கொள்வது யாதெனில் உண்மையான குற்றவாளிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே.

ஆகவே கிழக்கில் இருந்து யார் கைது செய்யப்பட்டாலும், வடக்கிலிருந்து யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம் எனவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.


No comments