இளங்குமரனுக்கு நீதிமன்ற அழைப்பு!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.
எனினும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் இளங்குமரனால் வருகைதர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் எம்.ஏ .சுமந்திரன் காவல்துறை பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் முன்னிலையாகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment