யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை - சுரேஷ்
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும்.
இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.
அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம்.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்.
இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை.
சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம்.
எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் - என்றார்.

Post a Comment