பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்


நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்றது. 

அதன் போது , தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட குறித்த தீர்மானம் சபையில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு , தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் உரையாற்றும் போது, 

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. 

அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை அபிவிருத்தி செய்கின்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம். எனவே அதில் மக்களைப் பிரநிதித்துவப் படுத்துகின்ற அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றுதல் அவசியமானது. 

அப்போது தான் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் மக்கள் சார், பிரதேசம் சார் பிரச்சனைகளையும் தேவைகளையும் தெவித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு வலுச்சேர்க்க முடியும்.

எனவே நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைப்பதை விடுத்து நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் பங்குபற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். 

அவ்வாறு அனுமதி வழங்காது ஒரு முழுமையற்ற வெறும் கண்துடைப்பிற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடப்படுமாயின் அதனை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்காமல் முற்றாகப் புறக்கணிக்கின்றோம் என்றார். 

No comments