வலி. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் தேசிய மக்கள் சக்தினர் - பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிறார் தவிசாளர்


வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியின் குழப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இருந்து பிரதேச சபை உறுப்பினர்களை தவறாக வழி நடத்தி . சபை கூட்டங்களையும் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என வலி. வடக்கின் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார். 

வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்

வலி. வடக்கில் மல்லாகம் தெற்கு வீரபத்திரர் ஆலய வீதி , புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்குள் உள்வாங்கப்பட்டு , அந்த வீதியினை புனரமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்த வேளை தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபை பெண் உறுப்பினரும் இன்னும் சில தேசிய மக்கள் சக்தியினை சேர்ந்தவர்களும்  அப்பகுதியில் உள்ள ஒரு சிலரை அழைத்து வந்து வீதியின் அபிவிருத்தி பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.
 
அது தொடர்பில் அறிந்து நான் , பிரதேச சபையின் செயலாளர்,  அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்தர் ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று இருந்தோம் . அங்கு அவ்விடத்தில் நின்ற அப்பகுதியை சேர்ந்த சிலருடன் வீதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் எடுத்து கூறி , அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த வேளை தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி அவ்விடத்தில் தொலைபேசிகளில் காணொளிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். 

அவ்வேளை , நான் இவ்விடத்தில் காணொளி எடுப்பதனை நிறுத்துமாறு பணித்தேன். அதனையும் மீறி காணொளிகளை பதிவு செய்து என்னுடன் தர்க்கப்பட்டனர். பின்னர் வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர் நான் தன்னை தாக்க வந்ததாக , பொலிஸ் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாக அறிகிறேன். அது தொடர்பில் என்னிடம் இது வரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

குறித்த வீரபத்திரர் ஆலய வீதி புனரமைப்பை தேசிய மக்கள் சக்தியினர் தடுத்து நிறுத்தியமையால் , தற்போது நாம் அந்த வீதிக்கான நிதியினை ஐயனார் ஆலய வீதிக்கு திருப்பி , தற்போது ஐயனார் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளோம். 

வலி. வடக்கு பிரதேச சபையினால் கடந்த 06 மாத கால பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எமது பிரதேச அபிவிருத்திகளை தேசிய மக்கள் சக்தியின் திட்டமிட்டு குழப்பும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
சபையில் தீர்மானங்கள் எடுக்கும் போது , ஆதரவு தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் , பின்னர் அந்த தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுகின்றனர்.  இவ்வாறாக அவர்கள் தங்கள் இரட்டை முகங்களை காட்டி வருகின்றனர்

பல்வேறு தேவைகள் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், வலி. வடக்கு பிரதேசம் காணப்படுகின்ற நிலையில் தமது உறுப்பினர்களை கொண்டு அந்த அபிவிருத்தி பணிகளை குழப்பும் செயற்பாட்டில் தேசிய மக்கள் சக்தியினர் ஈடுபட்டுள்ளனர். 

"L" போர்ட் உறுப்பினர்களை தூண்டி விட்டு , வலி. வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்திகளை தேசிய மக்கள் சக்தியினரால் தடுக்க முடியாது. 
வலி. வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்தி பணிகளை குழப்பும் தேசிய மக்கள் சக்தியினர் , தற்போது தவிசாளரான என் மீதும் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக தையிட்டி விகாரையை சூழவுள்ள வேலிகளை பின் நகர்த்தி போடுவதற்கான ஒப்பந்த வேலைகளை நான் கோரியதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் தமது முகநூல்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பிரதேச சபையின் தவிசாளர் , தனது பிரதேச சபை ஆளுகைக்குள் எந்த விதமான அரசாங்கத்தின் ஒப்பந்த வேலைகளையும் எடுக்க முடியாத என்ற அடிப்படை விடயம் கூட தெரியாத தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுகிறனர். 

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களை பிழையாக வழி நடத்துபவர்கள் கட்சியின் மேல் மட்டத்தினரே , பிரதேச சபை கூட்டங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையாளர் பகுதிகளில் இருந்து , சபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, சபை உறுப்பினர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தூண்டி விட்டு , குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்.

இது அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் திட்டமிட்ட செயற்பாடுகள் தான் என தெரிவித்தார்.

No comments